#Twit


#. நோய்க்கு முதல் மருந்து... தாய்!
#. முட்டாள்களில் பல ரகம். அதில் உயர் ரகம், அறிவாளி!
#. விருப்பம் இருந்தால், ஆயிரம் வழிகள். விருப்பம் இல்லாவிட்டால், ஆயிரம் காரணங்கள்!
#. எல்லாமே குற்றம் என்பவர்களுக்கு, ஏனோ குற்றம் சொல்வது மட்டும் குற்றமாகவே தெரிவதில்லை!
#. தொடர்ச்சியா சில உதவிகளைச் சிலருக்குச் செய்தால், அதை நம்ம கடமையாவே ஆக்கிருவாங்க ஒருநாள்!


#. சிலர் தேவைகளுக்காக மட்டுமே நம்மிடம் சிரித்துப் பழகுகிறார்கள் எனத் தெரிந்தும், பழகிக்கொண்டு இருக்கிறோம் நம் தேவைகளுக்காக!
#. உலக நடிப்பில் ஒரு வகை, விருந்தாளிகள் வீட்டில் இருக்கும்போது கணவனும் மனைவியும் காட்டும் அந்நியோன்யம்!
#. உங்க இஷ்டம் போலச் செய்ங்க! எனும் மனைவியின் அனுமதி, உண்மையில் அனுமதியே இல்லை!
#. வாதாட பலருக்குத் தெரியும். உரையாட ஒரு சிலருக்கே தெரியும்!
#. நம்பர் 1 என்பது ஜீரோவுக்கு மிக அருகில் இருப்பது!


#. முடியாது என்பதன் டெக்கரேட்டட் வெர்ஷன்தான் யோசித்துச் சொல்கிறேன்!
#. நோண்டி நோண்டிக் கேட்கப்படும் கேள்விகள்தான், தோண்டித் தோண்டி பொய் சொல்லவைக்கின்றன!
#. ஒரு மொழியைக் கற்கும் போது குழந்தைபோல் இருக்க வேண்டும். தவறாகப் பேசுவதற்குக் குழந்தை வெட்கப்படுவது இல்லை.
#. பெண்கள் வெளியே கிளம்ப ஐந்து நிமிடம் என்றாலும், ஆண்கள் வீடு திரும்ப ஐந்து நிமிடம் என்றாலும் நம்பிடவே கூடாது!
#. அறிவும் மனமும் பேசி முடிவெடுத்து சட்டைப் பையிலிருந்து ஒரு ரூபாய் எடுப்பதற்குள், நம்மைக் கடந்துபோய்விடுகிறார்கள் பிச்சைக்காரர்கள்!


#. எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும். யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும்!
#. மார்கெட்ல என்ன காய்கறில்லாம் சீப்பா கிடைக்கும்னு ஹாஸ்டல் சாப்பாட்டை வெச்சே கண்டுபிடிச்சுரலாம்!
#. மனைவி... சமையல் பழகும் முன், மனைவியின் சமையல் பழகிவிடுகிறது!
#. பெண்கள் எதிர்காலம் பற்றிக் கவலைப்படுகிறார்கள் கணவன் அமையும் வரை. ஆண்கள் எதிர்காலம்பற்றிக் கவலைப்படுவதே இல்லை மனைவி அமையும் வரை!
#. தாயிடம் உங்கள் பேச்சுத் திறமையைக் காட்டாதீர்கள். உங்களுக்குப் பேச்சு கற்றுக்கொடுத்ததே அவர்தான்!


#. அப்பாவும் மகளும் பேசுவது புரிதல்கள்; அம்மாவும் மகளும் பேசுவது ரகசியங்கள்!
#. ஹ்யூமர் சென்ஸ் உள்ள ஆணையும், ரூமர் சென்ஸ் உள்ள பெண்ணையும் பெண்களுக்கு எளிதில் பிடித்து விடுகிறது!
#. பெண்களின் SIGNATURE என்பது, பெயரை எழுதுவது; ஆண்களின் SIGNATURE என்பது, பெயரைக் கிறுக்குவது!
#. நோயுற்றோருக்கான முதலுதவி, மருத்துவர்களின் புன்னகை!
#. தூங்குவதுபோல் நடிப்பவர்கள் புரண்டு படுப்பது இல்லை!


#. கீ செயின் என்பது நாம் எல்லா சாவிகளையும் ஒரே சமயத்தில் தொலைப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது!
#. ஃபிரிஜ் என்பது சற்றே காஸ்ட்லியான குப்பைத் தொட்டி!
#. உங்களை ஒருவர் விமர்சித்தால் உங்குக்குக் கோபம் வருதா? அப்படின்னா அந்த விமர்சனம் கரெக்டு!
#. உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் எனப் புரிகிறது!
#. வண்டியை மழையில நிறுத்தியிருந்தா சுத்தமாகும், ஓட்டிட்டுப் போனா அழுக்காகும் இவ்ளோதாங்க வாழ்க்கை!


#. இங்கு பதில் சொல்வது எதிர்த்துப் பேசுவதாகவே கருதப்படுகிறது!
#. நம்பினால் நம்புங்கள்... தீர்க்கமான பல முடிவுகள் ஜன்னலோரப் பயணங்களில் எடுத்தவையாகவே இருக்கும்!
#. பிறரைக் காயப்படுத்தும் என்று நான் வெளிப்படுத்தாத பல வார்த்தைகள் என்னைக் காயப்படுத்திக்கொட்டே இருக்கின்றன!
#. எந்த மகனும் தன் அம்மாவின் சமையலை, அம்மாவைத் தவிர யாரிடத்திலும் குறை சொல்வதில்லை!
#. நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்கத் தொடங்கும் முன், விலகி நிற்கக் கற்றுக் கொள்வது சிறந்தது.


#. உண்மை சொன்னால் ஓராயிரம் கேள்வி கேட்பதும், பொய் சொன்னால் நம்புவதும் மனைவி மட்டும்தான்!
#. வாய் தவறிய வார்த்தைகள் மட்டும் எப்படியோ சரியாகப் போய்ச் சேர்ந்துவிடுகின்றன!
#. பிரச்னைகளைச் சிலர் தைரியமாகவும் சிலர் புன்னகையுடனும் சிலர் கண்டுகொள்ளாததுபோலவும் எப்படியோ கையாண்டு விடுகின்றனர்.
#. ஏற்றிவிடுபவர்களைவிட, ஏத்திவிடுபவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்!
#. தூக்கி எறியப்படும் தருணங்களில்தான், சிறகை விரிக்கிற வாய்ப்பு அமைகிறது.


#. சொந்தக் கால்ல நிக்கிறப்போதான் தோணுது, முன்னாடி நம்மைத் தாங்கியவர்களுக்கு எம்புட்டு வலிச்சிருக்கும்னு!
#. நாம் சொன்ன ஒரு பொய் உலகுக்குத் தெரியவரும்போது, நாம் சொன்ன அத்தனை உண்மைகளும் சந்தேகத்துக்கு இடமாகின்றன!
#. நேரத்தைச் சேமிக்க வந்ததாக நினைக்கும் கைபேசியும் இணையமும்தான் அதிக நேரத்தைத் தின்கின்றன!
#. நீ யாரையாவது ஏமாற்றிவிட்டால் அவர்கள் ஏமாந்துவிட்டதாக அர்த்தம் இல்லை, உன்னை அளவுக்கு அதிகமாக நம்பி இருக்கிறார்கள் என்று அர்த்தம்!
#. உணவகங்களில் பணி செய்யும் வடகிழக்கு இந்தியர்கள் முகம் சுழித்தோ, கோபமுற்றோ கண்டதில்லை. அது இயல்பா, வறுமையின் வெளிப்பாடா தெரியவில்லை!


#. கணவன் அடிச்சா நாளிதழ்ல செய்தியா போடறாங்க. மனைவி அடிச்சா வார இதழ்ல ஜோக்கா போடறாங்க!
#. ஏன் போன் எடுக்க இவ்ளோ நேரம்? என்பதில் வெட்டியாத்தானே இருக்க? என்பதுவும் அடக்கம்!
#. வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நாலு வகையான சட்னி கிடைக்குது. நேத்து வெச்சது, முந்தாநாள் வெச்சது, காலைல வெச்சது!
#. பக்கத்தில் ஆண்கள் இல்லாதபோது, பெண்கள் கரப்பான்பூச்சிகளுக்குப் பயப்படுவது இல்லை!
#. ஆண்கள் ஒரு கட்டத்தில் மேக்கப்பைக் கைவிட்டுவிடுகிறார்கள்; பெண்களை ஒரு கட்டத்தில் மேக்கப் கைவிட்டுவிடுகிறது!


#. செய்யும் செயல் யாருக்கும் தெரியக் கூடாது என்று நினைத்தால், நீங்கள் நிச்சயமாகத் தவறு செய்கிறீர்கள் என்று கொள்க!
#. கீழே விழுந்ததும் இயல்பாக எழுந்து நடக்கும் குழந்தையைக் கவனித்தாலே, வெற்றிக்கான ஃபார்முலா கிடைக்கும்!
#. அழகா இருந்தா கான்ஃபிடென்ஸ் வருமானு தெரியாது; ஆனா, கான்ஃபிடென்ட்டா இருந்தா, அழகும் வந்துரும்!
#. ஒரு பெண் தன் அப்பாவை அறிவாளியாகவும், தன் பிள்ளையின் அப்பாவை முட்டாளாகவும் கற்பனை செய்கிறாள்!
#. அபராதம் என்பது தவறாக நடந்து கொண்டதற்குச் செலுத்தப்படும் வரி. வரி என்பது சரியாக நடந்து கொண்டதற்குச் செலுத்தப்படும் அபராதம்!


#. கொஞ்சம் படித்தால், சொந்தக் கிராமத்தைவிட்டு வெளியேறுகிறோம். நிறையப் படித்தால், சொந்த நாட்டைவிட்டே வெளியேறுகிறோம்!
#. இறப்பதுபோல கனவு கண்டவர் உண்டு. எவரேனும் பிறப்பதுபோல கனவு கண்டது உண்டா?
#. பிடித்ததுபோக வரும் சம்பளம், யாருக்கும் பிடிப்பது இல்லை!